.

Our Vision
அன்பு, கருணை என்பவற்றுடன் கூடிய உன்னத சேவையை மக்களுக்கு வழங்கி சிறந்த ஆரோக்கியமும் சுகாதார மேம்பாடும் பெற்ற சமுதாயம்

Our Mission
அா்ப்பணிப்புடனான சேவை, மனித நேயமுடனான பராமரிப்பு, திருப்திகரமான செயற்பாடுகள், பயன்தகு சுகாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தல், பாதுகாப்பான காப்புறுதி.

Our Motto
Primaordial Prevention Protected Generation

Tuesday, September 21, 2010

டெங்கு காய்ச்சலா? அறிவது எப்படி?

அன்றுதான் ஆரம்பித்த காய்ச்சல் 103- 104 எனக் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தது. பத்து வயது மதிக்கத்தக்க அந்தப் பையனின் கண்கள் சற்று சிவந்திருந்தன. கடுமையான உடல் உழைவினால் அமைதியாக இருக்க முடியாது அந்தரப்பட்டுக் கொண்டிருந்தான். சற்றுத் தொண்டை நோவும் இருந்தது. ஆயினும் தடிமன், மூக்கடைப்பு இருமல் போன்ற அறிகுறிகள் எதுவுமே இல்லை. இத்தகைய காய்ச்சல் இப்பொழுது பரவலாகக் காணப்படுகிறது.


'இது டெங்கு காய்ச்சலாக இருக்குமோ' என கூட்டி வந்த தாய் கேட்டாள். எந்த வைத்தியனாலும் நூறு சதவிகிதம் நிச்சமாகச் சொல்ல முடியாது. காரணம் ஏனைய வைரஸ் காய்ச்சல்கள் போலவே இதுவும் ஆரம்பத்தில் இருக்கும். இது டெங்குதான் என உறுதியாகச் சொல்லக் கூடிய அறிகுறிகள் ஏதும் முதல் மூன்று நாட்களிலும் இருக்காது.

'இரத்தம் சோதித்துப் பார்ப்பமோ' என்று தாய் கேட்டாள். முதல் நாளிலிலேயே இரத்தம் சோதித்துப் பார்ப்பதிலும் எந்தவித பலனும் இருக்கப் போவதில்லை.

டெங்கு என்பதை நிச்சயமாகக் காட்டும்
Dengue antibody டெஸ்ட் செய்வதற்கு காய்ச்சல் தொடங்கி ஒரு வாரம் வரை செல்ல வேண்டும். பெரும்பாலும் அதற்கிடையில் காய்ச்சல் குணமாகிவிடும்.

டெங்குவாக இருக்குமோ என ஐமிச்சம் என்றால், காய்ச்சல் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பின்னர் FBC என்று சொல்லப்படும்
Full blood Count செய்து பார்க்கலாம். அதில் முக்கியமாக Platelet count மற்றும் PCV ஆகியவற்றையே மருத்துவர்கள் கவனத்தில் எடுத்துப் பார்ப்பார்கள். இந்தப் பரிசோதனைகளில் மாற்றம் இருந்தால் அடுத்து வரும் ஒரு சில நாட்களுக்கு இப்பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து நோயின் நிலையைத் தொடர்ந்து கணிக்க நேரிடும்.

ஆனால் அதுவரை ஏனைய கடும் காய்ச்சல்காரர்களைப் பராமரிப்பது போல பாராமரித்தால் போதுமானது. காய்ச்சலுக்கு பரசிற்றமோல் கொடுக்க வேண்டும். ஆறு மணிநேரத்திற்கு ஒரு தடவை கொடுக்க வேண்டும். வளர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு தடவையும் இரண்டு மாத்திரைகள் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கும், இளவயதினருக்கும் அவர்களது எடைக்கு ஏற்ப அல்லது வயதிற்கு ஏற்ப மாத்திரையின் அளவு மாறுபடும்.

புரூபன், பொன்ஸ்டன், டைகுளோபெனிக் போன்ற வலிநிவாரணி மருந்துகளை டெங்கு என்ற சந்தேகம் இருந்தால் காய்சலுக்கோ உடல்வலிக்கோ கொடுக்கக் கூடாது. போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். உண்ண முடிந்தால் வழமைபோலச் சாப்பிடலாம். ஆயினும் கோக், நெக்ரோ போன்ற செந்நிறப் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல சிவப்பு நிறமுடைய ஏனைய உணவுகளையும், பீற்ரூட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

சாதாரண டெங்கு காய்ச்சல் ஆபத்தானது அல்ல. சிலநாட்களில் எந்தவித பின்வளைவுகளும் இன்றி தானாகவே குணமாகிவிடும்.
ஆயினும் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல்
(Dengue Haemorrhagic Fever- DHF) மிகவும் ஆபத்தானது. இதன்போதும் கடுமையான காய்ச்சல் இருக்கும். முகம் சிவத்தல், கடுமையான தலையிடி, கண்வலி, தசைவலி, மூட்டுவலி ஆகியன சேர்ந்திருக்கும். இவை 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம்.

அத்துடன் இரத்தம் கசிவதற்கான அறிகுறிகள் ஏதும் தோன்றலாம். உதாரணமாக மூக்கால் இரத்தம் வடிதல், முரசிலிருந்து இரத்தம் கசிதல், தோலில் ஆங்காங்கே சிவப்பான புள்ளிகள் தோன்றல், ஊசி ஏற்றிய இடத்தில் அல்லது குளுக்கோஸ் ஏற்றிய இடத்தில் இரத்தம் கசிந்து கண்டல் போலத் தோன்றுதல், வாந்தியோடு இரத்தம் வருதல், மலம் கருமையாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்.

அத்துடன் இந்நோயின் போது ஈரல் வீக்கமடைவதால் பசியின்மை, வயிற்றுநோ, வாந்தி, போன்றவை தோன்றும். சிலருக்கு வயிற்றோட்டமும் ஏற்படுவதுண்டு. அத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் எந்த வயதினரையும் பாதிக்கலாம் ஆயினும் குழந்தைகளைப் பாதிப்பது அதிகமாகும். அதிலும் ஒரு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளைத் தாக்கும் போது ஆபத்து அதிகமாகும். நோஞ்சான் பிள்ளைகளைவிட ஆரோக்கியமான பிள்ளைகளையே அதிகம் பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்கான காரணம் தெளிவாகவில்லை.

டெங்கு கிருமியில் பல உபபிரிவுகள் இருப்பதால் ஒரு முறை டெங்கு வந்தால் மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. திரும்ப வரக் கூடிய சாத்தியம் உண்டு. உண்மையில் முதல் தடவை வரும்போது பெரிய பாதிப்புகள் இருப்பதில்லை. சாதாரண காய்ச்சல் போல குணமாகிவிடும். ஆயினும் அடுத்த முறை வரும்போதே கடுமையாக இருக்கும். டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் போன்றவை அப்பொழுதே வருகின்றன.

பலருக்கு காய்ச்சல் விட்ட பின்னரும் கடுமையான களைப்பு, தலைச்சுற்று, கிறுதி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவை உடலின் உள்ளே குருதிக் கசிவு ஏற்பட்டதால் அல்லது நீர்இழப்பு ஏற்பட்டதால் தோன்றியிருக்கலாம். எனவே அலட்சியப்படுத்தக் கூடாததாகும்.

டெங்கு காய்ச்சல் உலகளாவிய ரீதியில் பரவியுள்ளது. சிகப்பாக காட்டிய பகுதியில் கடுமையான பரிப்புகளை ஏற்படுத்துகிறது.

இது எயிடிஸ் எஜிப்பாய் (Aedes aegypti) என்ற வகை நுளம்பினால் பரவுகிறது. நோயாளியின் இரத்தம் குடித்து வயிறு பருத்திருக்கும் நுளம்பனைப் படத்தில் காணுங்கள்.






No comments:

Post a Comment